அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் அதிகாரி பணி நீட்டிப்பு மற்றும் நியமனம் குறித்து கேள்வி எழுப்பும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மேயருக்கு இணையான பதவியை தன் நண்பர் ராஜா சங்கருக்கு வழங்கியது எப்படி என்பது குறித்து விளக்க முடியுமா என்றும், அந்த நியமனத்தை எந்தவகையில் விசாரிப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- கடந்த இரண்டு நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும், முன்னாள் அமைச்சர் கே.என் நேரு அவர்களும் உள்ளாட்சித்துறை பற்றி சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமை பொறியாளராக இருந்த  புகழேந்தியை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி எப்படி நியமித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நியமனத்திற்கு தமிழக அரசின் அரசாணை பெறப்பட்டுள்ளது, இந்த நியமனத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறார். நான் அண்ணன் ஸ்டாலினிடம் சில சந்தேக விளக்கம் கேட்க விரும்புகிறேன், ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரது நெருங்கிய நண்பர் ராஜா சங்கரை special bridges of Mayor மேயருக்கான சிறப்பு அதிகாரி-பாலங்கள் என்று ஒரு புதிய பதவியை உருவாக்கி ராஜா சங்கரை அண்ணன் ஸ்டாலின் நியமித்தார்.ஆனால்  ராஜா சங்கர் நியமனத்திற்கு எவ்வித அரசாணையும் கிடையாது. மன்றத்தின் ஒப்புதலும் கிடையாது. மேயர் ஸ்டாலின் தலைமையில் இருந்த இரண்டு மன்ற உறுப்பினர்கள் உள்ள நியமன குழு ஒப்புதல் மட்டும் பெற்று  ஸ்டாலின் ராஜா சங்கரை இந்த பொறுப்புக்கு நியமித்தார்.

ஆனால் ராஜா சங்கர் மேயருக்கு இணையான அந்தஸ்தில் செயல் பட்டார். கமிஷ்னர், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ராஜா சங்கரிடம் ஆலோசனை மற்றும் உத்தரவுகளை பெறவேண்டும், பணி ஆய்வு, டெண்டர் யாருக்கு என்று முடிவு செய்வது என்று சர்வ வல்லமை படைத்த மேயருக்கு இணையான பதவியை ராஜா சங்கருக்கு  ஸ்டாலின் எப்படி வழங்கினார்கள். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று ஸ்டாலின் சொன்னால் நல்லது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.