கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த சசிகாந்த் செந்தில் அண்மையில் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோது அங்கே ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. தற்போது பாஜகவில் இணைந்து மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். ஒரே நேரத்தில் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள், வெவ்வேறு தேசிய கட்சிகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அண்ணாமலை பாஜகவில் இணைந்தவுடனே அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதுபோல, காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் செந்திலுக்கு புதிய பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய பதவி குறித்தும் அண்ணாமலை பாஜக துணைத் தலைவராக இருப்பது குறித்தும் சசிகாந்த் செந்தில் பதில் அளித்துள்ளார்.

 
 “காங்கிரஸ் கட்சியில் நான் சேரும்போது எந்த டிமாண்டையும் கட்சிக்கு வைக்கவில்லை. அதேபோல பதவி குறித்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணம்கூட இல்லை. கட்சிக்காக நீண்ட நாட்களாகப் பணியாற்றிவர்கள்தான் மேலே செல்லவேண்டும். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி மதவாத சக்திகளை வளரவிடாமல் எதிர்க்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். பாஜக என்பது தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சி. யார் போய் சேர்ந்தாலும் உடனே பொறுப்பு கொடுத்து விடுவார்கள். அதனால், தலைவர் பதவியைக்கூட அங்கே கொடுப்பார்கள். அதில், ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.” என்று சசிகாந்த் செந்தில் விமர்சனம் செய்துள்ளார்.