’சசிகலாவுக்கு தண்டனையை நீடிக்க முடியாது, அவருக்கு சலுகைகளை செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என்று சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளதால் சில அதிகாரிகள் மட்டுமல்லாமல் சசிகலா குடும்பத்தினரும் சிக்கலில் மாட்ட உள்ளனர். 

கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. 

இதுகுறித்து அப்போது சிறை துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ’’ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அறிய சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 2 முறை தகவல் அறியும் சட்டத்தில் அறிக்கை குறித்து கேட்டபோதெல்லாம் பதில் தர மறுக்கப்பட்டது. பின்னர் 3-வது முறையாக மேல் முறையீட்டுக்கு சென்று அறிக்கையை பெற்றேன். அந்த அறிக்கை எனக்கு ஒருவித திருப்தியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. நான் முறைப்படி விசாரணை நடத்தி கண்டுபிடித்த தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. நான் கூறாத சில தகவல்களும் அந்த அறிக்கையில் உள்ளது. குறிப்பாக தனியாக சமையல் செய்தது, அதற்கு ஆதாரமாக சிதறி இருந்த மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களை சேகரித்தது. சசிகலா தங்கி இருந்த 4 அறைகளிலும் அவர் பார்வையாளர்களை சந்தித்த அறையிலும் திரைச் சீலைகள் போடப்பட்டு இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான் இதையெல்லாம் சாதித்தார்.

ஆனால், அந்த புகாரை கர்நாடக லஞ்ச ஒழிப்பு துறை தான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் பரிந்துரைத்து உள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி சிறை துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் சிறை துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

அதிகாரிகள் சிறை விதிமுறைகளுக்கு மீறி சலுகை செய்து கொடுத்து உள்ளதால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இந்த புகாருக்காக சசிகலாவின் தண்டனையை நீடிக்க முடியாது. நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கும், சசிகலாவுக்கு சிறப்பு சலுகை செய்து கொடுக்கப்பட்டதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி விசாரணை நடத்தினால் இதில் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிக்குவார்கள்.

தற்போதைய நிலையில் கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துவதால் அரசு ஊழியர்களான சிறை துறை அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.