தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் எமர்ஜென்சியின் முடிவில் மொரார்ஜி தேசாயின் ஆட்சியில்  இந்திரா காந்தியைக் கைது செய்தவருமான  முன்னாள் டிஜிபி  வி.ஆர்.லட்சுமி நாராயனண்  வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91.

லட்சுமி நாராயண்  1945ம் ஆண்டு சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். 1951ம் ஆண்டு சிவில் சர்வீஸ் எழுதிய பேட்சைச் சேர்ந்தவர் இவர். தன்னுடைய போலீஸ் பணியை மதுரையில், ஏ.எஸ்.பி.யாக துவங்கியவர்.பின்பு மத்திய புலனாய்வுத்துறையின் இணை இயக்குநராக செயல்பட்டார் லட்சுமி நாராயணன். எமெர்ஜென்ஸி காலம் முடிவுக்கு வந்த பிறகு, மொரார்ஜி தேசாய் ஆட்சியின் கீழ் இந்திரா காந்தியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கைது செய்தார் லட்சுமி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திராவின் வீட்டிற்கு சென்ற லட்சுமி நாராயணன், ராஜிவ் காந்தியிடம் உங்கள் தாயாரை நீங்களே சரணடைச் சொல்லுங்கள். என்னால் ஒரு காவல்துறை அதிகாரி போன்று நேருவின் வாரிசையும், இந்தியாவின் முன்னாள் பிரதமரையும் கைது செய்ய இயலாது என்று கூறினார்.சரணடைந்த இந்திரா அவரிடம், உங்களின் கைவிலங்குகள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவரோ நான் உங்களுக்கு கீழ் விசுவாசமாக கடமையாற்றியுள்ளேன். உங்கள் கைகளால் இரண்டு முறை மெடல்கள் வாங்கியுள்ளேன் என்று கூறிய அவர், கை விலங்குகளை எடுத்துவர மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த போது இவரை புலனாய்வுத்துறை இயக்குநராக பணியில் நியமிக்க முடிவு செய்தார். ஆனால் அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். லட்சுமி நாராயணனை தமிழகத்தின் டி.ஜி.பியாக அறிவித்து அவரை தமிழகத்திற்கு திருப்பி பெற்றுக் கொண்டார்.1985ல் பணி ஓய்வு பெற்றார். இவருடைய சகோதரர் புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சுரேஷ் என்ற மகனும், உஷா ரவி மற்றும் சீதா என்ற மகள்களும் உள்ளனர். செவ்வாய் கிழமை காலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மதுரையில் இவர் முதன்முதலாக டி எஸ்பியாக பதவியேற்றபோது முதல்வராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அடுத்து பெரியார்,ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என பல தலைவர்களுடன் பணியாற்றிய பெருமை படைத்தவர் விஆர் லட்சுமி நாராயனண் என்பது குறிப்பிடத்தக்கது.