சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாஜி அமைச்சர் மணிகண்டன் அங்கே தாவப்போகிறார் இங்கே தாவப்போகிறார் என்று ஒருபக்கம் பில்டப் கொடுத்து வந்த நிலையில், இப்போதெல்லாம்  பக்கத்து தொகுதிகளில் நடக்கும் அரசு நிகழ்சிகளில்கூட ஒன்றுவிடாமல் கலந்துகொண்டு  வம்படியாக மேடியேறி வருகிறாராம்... அதற்கு சொல்லப்படும் காரணம் தான் அப்படியா என வாய்பிளக்க வைக்கிறது.

அதிமுக அமைச்சரவையிலேயே மிக இளம் வயது அமைச்சராகவும், இது எங்க ஏரியா உள்ளவராதே என்று சொந்தக் கட்சிக்காரர்களையே தொகுதிக்குள் விடாமல் துரத்தியடித்து அட்ராசிட்டி அமைச்சர் என்று பெயர்வாங்கியவர் மணிகண்டன். நன்கு படித்தவர், மருத்துவர், என்ற காரணத்திற்காகத்தான்  ராமநாதபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவுடன் இவருக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் இருந்தவரை அடக்கிவாசித்த அமைச்சர். அவரின் மறைவுக்கு பின்னர் முதல்வர் எடப்பாடியாரையோ மற்ற அமைச்சர்களையோ ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதுதான் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு. தன் தொகுதியில் நடந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க முதலவர் வருவதற்குள் தானே மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்து அலப்பரை செய்தார் மணிகண்டன், இந்நிலையில்  கூட்டணி கட்சிகளை தொகுதிக்குள் விட மறுக்கிறார், கட்சி சீனீயர் எம்பிக்களை அநாயசமாக பேசுகிறார் என்று  மணிகண்டன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வேறு. தன்னை அவமானப்படுத்திய மண்கண்டனின் மீது  ஏற்கனவே ஏக கடுப்பில் இருந்தார் முதலமைச்சர். இந்நிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது மணிகண்டன்  ஊழல் புகார் சொல்ல, இனியும் பொறுக்க முடியாது எனகூறி மணிகண்டனின் அமைச்சர் பதவியை பறித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

பதவி போன கையோடு , வனத்திற்கும் பூமிக்கும் குதித்து தான் யாரென்ற சுயரூபத்தை காட்டப் போகிறார் மணிகண்டன்  என்று  கூறிவந்த நிலையில். எனக்கு அமைச்சர் பதிவியே வேண்டாம் முதலமைச்சரை ஒருமுறையேனும் பார்க்கச் சொல்லுங்க என சிபாரிசு கேட்டு பன்னீரின் வீட்டுக்கு நடையாய் நடந்து மணிகண்டனின் பறிதாபங்கள் அரங்கேறின. ஒருகட்டத்தில் திமுகவிற்கு போகப்போகிறார் அரசின் உண்மைகளை உடைக்கப்போகிறார் என்று அவரின் ஆதரவாளர்கள்  கொந்தளித்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் திமுகவிற்கு போனால் இருக்கிற எம்எல்ஏ பதிவுயும் காலியாகிவிடும் என்று விவரம் தெரிந்தவர்கள் எச்சரிக்க ஆஃப்பாகிப்போனார் மணிகண்டன்.

கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசித்து, நல்ல பெயர் எடுத்தால் கோபம் தனிந்து முதல்வரே அழைப்பார் பதவியும் தேடி வரும், என தனக்கு தோதுவான சீனியர் அமைச்சர் சொல்ல, நல்லப்பிள்ளையாக உருமாறி இருக்கிறார் மண்கண்டன் என பேச்சு அடிபடுகிறது. தற்போது அமைச்சர் பதவி இல்லாத நிலையிலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் ஒன்றுவிடாமல் கலந்து கொண்டு பவ்யம் காட்டிவருகிறார் மணிகண்டன்.  இப்போதெல்லாம் பக்கத்து மாவட்ட நிகழ்ச்சிகளானாலும்  கூட தவறாமல். நேரத்திற்கு வந்து அட்டனென்ஸ் போட்டுவிடுகிறார். நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வம்படியாக மேடையேறி முதல்வரிசையில் அமர்ந்துள்ள  மணிகண்டனின் புகைப்படங்கள் வலைதளங்களில் உலா வருகிறது .

கூட்டந்தோறும் கலந்துகொள்ளும் அமைச்சர்களிடம் அண்ணே நம்பள பத்தி கொஞ்சம் அங்க எடுத்துச் சொல்லுங்க என்று பம்மி வருகிறார் என தகவல்களும் உலா வருகிறது. முதலமைச்சரின் மனதில் இடம்பிடிக்கத்தான் இத்தனையும் என்று விமர்சிக்கின்றனர் ரரக்கள்...நம்ம நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பும் தன் ஆதரவாளர்களிடம்,  அவரு மனசு மாறுகிறாரா இல்லையா என்று பார்ப்போம், வெயிட் அன் சி என்று தேற்றுகிறாராம் மாஜி...