நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழக காங்கிரஸில் வெட்டு குத்து நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போல. மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கும், மாஜி தலைவர் இளங்கோவனுக்கும் இடையில் யுத்தம் கொடிகட்டி பறக்கிறது. பரஸ்பரம் இருவருமே தங்களது ஆதரவாளர்களை அடிதடி மூடிலேயே வைத்திருப்பதால் முதல் வரியில் நாம் சொல்லியிருப்பது நிஜமாகலாம்.
 
விவகாரம் இதுதான்... தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரை அந்தப் பதவியில் இருந்து மாற்றியே ஆக வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது ஆதரவாளர் குஷ்புவும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். ஆனால் அரசரோ ‘நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் நான் தான் தலைவர். முடிஞ்சா மாத்திப் பார்!’ என்று வெளிப்படையாக கெத்து காட்டுகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் ‘சக்தி’ திட்ட துவக்க விழா கோலாகலமாக நடந்தது. இதில் இளங்கோவனின் அணியும் அதிசமயமாக கலந்து கொண்டது. போனால் போகிறதென்று குஷ்புவை அழைத்து குத்துவிளக்கு ஏற்ற வைத்தார் அரசர். ஆனால் இளங்கோவனை மேடையில் பேச விடவில்லை. இதனால் கீழேயிருந்த இளங்கோவன் ஆதரவு நிர்வாகிகள் சவுண்டு விட, பரபரப்புடன் கூட்டம் முடிந்தது. 

இந்நிலையில், முகுல் வாஸ்னிக்கிடம் அவர்கள் ஒரு புகார் மனுவை அரசருக்கு எதிராக கொடுத்துள்ளனர். அதில் “தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் வந்த பிறகு கட்சியின் நிதி கணக்கு வழக்குகளில் ஏக முறைகேடுகள் நடக்கிறது. உரிய கணக்கு காட்டாமல் கட்சியின் அறக்கட்டளை நிதியிலிருந்து பணத்தை எடுக்கிறார். இந்த சக்தி திட்டத்துக்கு மட்டும் காமராஜர் அறக்கட்டளையில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து செலவு செய்திருக்கிறார். ஆனால் காமராஜரின் போட்டோவை கூட நிகழ்ச்சி மேடையில் வைக்கவில்லை.” என்று குமுறியிருக்கிறார்களாம்.

 

மேலும் இந்த விவகாரம் தொட்டு பேசும் அதே கலகக்காரர்கள்... ”தனக்காக ஐந்து பைசா கூட சேர்த்து வைத்துக் கொள்ளாமல், தமிழகத்துக்காக, மக்களுக்காக என்று கோடி கோடியாய் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தவர் காமராஜர். அவர் பெயரில் பெருமையாக இயங்கும் அறக்கட்டளை நிதியிலேயே கைவைக்கிறார் என்றால் காங்கிரஸை பற்றி இவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? பல கட்சி மாறி வந்தவருக்கு காமராஜரின் மேன்மை எப்படி புரியும்! இவ்வளவு தைரியமாக முறைகேடு செய்யும் திருநாவுக்கரசரை இனி நிம்மதியாக தூங்க கூட விடமாட்டோம்.” என்று கொதித்திருக்கிறார்கள்.

 

ஆனால் அரசரோ இந்த உருட்டலுக்கெல்லாம் மிரளாதவராய்...”இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும் சொல்லும் வதந்தியான குற்றச்சாட்டுக்களை கேட்டுக் கேட்டும், பதில் சொல்லியும் புளித்துப் போய்விட்டது. நான் ஒரு ரூபாய் அளவுக்கு கூட கட்சி நிதியில் முறைகேடு செய்யவில்லை. இதை தலைமைக்கு நிரூபிப்பேன்.” என்றிருக்கிறார். எது எப்படியோ தேர்தல் நேரத்தில் சத்தியமூர்த்தி பவன் பக்கம் வெள்ளை வேஷ்டி, சட்டை கடை போடுபவர்களுக்கு செம்ம கலெக்‌ஷன் காத்திருக்கிறது.