evks elangovan iterates to arrest dinakaran and inquire sasikala

கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டுவந்து அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. 

கோடநாடு பங்களா, டீ எஸ்டேட் உட்பட சில இடங்களில் மட்டும் 6-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றுவருகிறது.

கடந்த 5 நாட்களாக நடந்த சோதனையில், பல கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் முறைகேடான பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புகழேந்தி, பூங்குன்றன், சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று மாலை விவேக் வீட்டில் சோதனை முடிந்தவுடன் விவேக்கையும் அழைத்து சென்று வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், சசிகலா தொடர்புடையவர்களிடம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் அரசியல் எதுவுமில்லை. வருமான வரி சோதனையின் ஒட்டுமொத்த சோதனைக்கும் காரணமான முதல் குற்றவாளி சசிகலாதான். எனவே சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும். தினகரனை வெளியே விட்டதே தவறு. தினகரனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என இளங்கோவன் தெரிவித்தார்.