கைலாசா நாட்டிற்காக தங்கத்தில் நாணயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழில் பொற்காசுகள் என்றும் ஆங்கிலத்தில் டாலர் என அழைக்கப்படும் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தனக்கென தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், இந்துக்களுக்கான நாடாக கைலாசா விளங்கும் எனக் கூறி இருந்தார். அவர் இப்படி அறிவித்ததிலிருந்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இதனையடுத்து அடிக்கடி வீடியோ வெளியிட்டு  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் கைலாசாவிற்கு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசாவை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தது மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. வாடிகன் வங்கியை அடிப்படையாகக் கொண்டு கைலாசா ரிசர்வ் வங்கி இயங்கும் என்றும், கைலாசாவிற்கான பணம் அச்சடிக்கப்பட்டு தயாராகி விட்டதாகவும் கூறியிருந்தார். இதற்கான முறைப்படியான அறிவிப்பை விநாயகர் சதூர்த்தி அன்று வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். 
 
இந்நிலையில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்துவதாக நித்யானந்தா அறிவித்துள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நித்யானந்தா, தமிழில் இந்த நாணயங்கள் பொற்காசுகள் என்றும் ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்படும் என கூறியுள்ளார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 நாடுகளோடு வர்த்தகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.