ஜெயலலிதாவுக்காக, நான் மட்டுமல்ல, பல கோடி மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர், பிசியோதெரபி நிபுணர்கள் குழுவினர் அளித்து வரும் தீவிர சிகிச்சையால் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், நன்றாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது., இதே நிலை தொடர்ந்தால் அவர் ஒரிரு நாட்களுக்குள் பூரண குணமடைவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் உள்பட பலர் வந்து சென்றனர்.
அப்போது, குற்றாலீஸ்வரன் கூறியதாவது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தேன். இங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசினேன். அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் அவர், உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். எனக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஏனென்றால் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக, நான் மட்டுமல்ல, பல கோடி மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனால் அவர் கூடிய விரைவில் பூரணகுணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
