அதிமுக கூட்டணி மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கருத்துக் கணிப்பில் மக்களவை தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். தமிழகத்தில் 38 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். வெளியாகி இருப்பவை கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. 2016 கருத்துக் கணிப்பு பொய் என நிரூபணமானது. அதுபோலத்தான் இப்போதும் நடக்கும். 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என ஒரு கருத்துக் கணிப்பு கூறியது. 

மற்ற மாநில மக்களின் நிலவரம் எனக்குத் தெரியாது. வாகனப் பெருக்கத்திற்கு ஏற்பவே சாலை விரிவாக்கங்கள் செய்யப்படுகின்றன. அதுவும் மக்கள் நலனுக்காவே செய்யப்படுகின்றன. மனிதர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால், உயிர் போனால் வராது. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலை விரிவாக்கங்கள் அவசியம். திமுக அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி கட்சி. அவ்வப்போது தன் நிலையை மாற்றிக் கொள்ளும்.

மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படும். 7 பேர் விடுதலை என்பது அரசின் நோக்கம். இனி ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும். மழையின் அளவு குறைந்ததால் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுகிறது. வறட்சியை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’என அவர் தெரிவித்தார்.