குஜராத் மாநிலத்தில் பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன் என தைரியமாய் பேசிய சிங்கப்பெண் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத்தின் சூரத் நகரில் பெண் போலீஸான சுனிதா யாதவ், கடந்த புதனன்று மங்கத் சவுக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தார். அப்போது விதிகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் அணியாமல்  காரில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய சுனிதா விதிகளை மீறியது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார், உடனடியாக அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த பிரகாஷ், சுனிதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார், பின்னர் சுனிதா மேலதிகாரிக்கு போன் செய்ய, அவரோ சம்பவ இடத்தை விட்டு வந்துவிடுமாறு கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக சுனிதா ஆதரவாக பலரும் கமெண்டுகளை பதிவிட்டனர்.இந்தநிலையில் நேற்று அமைச்சரின் மகன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே சுனிதாவை போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றமும் செய்துள்ளனர், ஆனால் இந்த பிரச்சினையால் சுனிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது.