மதுரை மேலூரில் 2021-ம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “மீனவர் படுகொலையில் மத்திய அரசுக்கு மாநில அரசு சரியான அழுத்தம் தரவில்லை. வலிமைமிக்க இந்திய அரசு ஏன் நமது மீனவர்களை பாதுகாக்கவில்லை. நம் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே தவறாகத்தான் உள்ளது. நட்பு நாடு என கூறிக்கொண்டு நமது மீனவர்களை கொன்றுகுவிக்கும் அவர்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகளை மத்திய அரசு வழங்கிவருகிறது.
தமிழகத்தில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறது. அதில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்துக்கு பாஜக  தலைவர் நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக. தமிழகத்தில் வேல் யாத்திரை முதன் முதலில் தொடங்கியது நாங்கள்தான். சசிகலா நல்ல உடல் நலத்துடன் மீண்டு வர வேண்டும்” என சீமான் கூறினார்.