திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒருவரும் இறக்காத நிலையில் 300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உளறிக் கொட்டிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழகத்தில் 20,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,776 பேர் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 11313 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 165 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற திமுக உறுப்பினரும், மு.க.ஸ்டாலினின் நண்பருமான எ.வ.வேலு கொரோனா தடுப்புபணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் இறந்து விட்டதாகவும், 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவர்களுக்கெல்லாம் நிவாரணம் கொடுக்கப்பட்டதா என அவர் அரசை கூறினார். 

 

ஆனால் உண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 91 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதுமே 300 பேர் இறக்காத நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 300 பேர் கொரோனா தாக்கி இறந்திருப்பதாக அவர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.