ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்? வெளியான தகவல்..!
இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்று தெரியாமலே திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம். அதேபோல் இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்று தெரியாமலே திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
ஆனால், ஈவிகேஎஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அவரை குடும்பத்தை சேர்ந்த ஒருவரே வேட்பாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவனின் 2வது மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் மறுக்கும் பட்சத்தில் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார்.