முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று திமுகவினர் புள்ளிவிவரங்களுடன் சமூகவலைதளங்களில் விளாசுகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறது அதிமுக. குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினின் பயணத்தை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். இந்நிலையில் தற்போதைய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தூபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அமீரகம்-தமிழகம் இடையே முதலீடுகள் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களின் இன்றைய நிலை என்ன என்பது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தோம்.

கையெழுத்து போட்டீங்களே.. காசு வந்துச்சா..?

எடப்பாடியாரின் துபாய் பயணத்தில் மொத்தம் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ள இந்த 6 ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.3,750 கோடி. இதன்மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அப்போது கூறப்பட்டது.

இண்டகிரேடேட் சென்னை பிசினஸ் பார்க் (இலவச வர்த்தகக் கிடங்கு திட்டம்), ஜெயன்ட் நிறுவனம் (பயோ டீசல் திட்டம்), இந்திய வர்த்தகம் மற்றும் கண்காட்சி, (மனிதவள பணியமர்த்தல்), பிரைம் ஹெல்த்கேர் குரூப் (மருத்துவமனை மற்றும் மருந்தகம்), புரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் (விவசாய பொருட்கள் உற்பத்தி திட்டம்), எம் ஆட்டோ (மின்சார வாகன தயாரிப்பு) ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதன் மூலம் ரூ.3,750 கோடி முதலீட்டில் சுமார் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் போடப்பட்ட இந்த 6 ஒப்பந்தங்களில் 5 மட்டுமே முதலீடு சார்ந்தவை. மேலும் அந்த ஐந்திலும் கடந்த 3 வாருடங்களில் இதுவரை 2 திட்டங்களுக்கு மட்டுமே முதலீடு பெறப்பட்டுள்ளது. அதிலும் DP World நிறுவனத்தின் இண்டகிரேடேட் சென்னை பிசினஸ் பார்க் (இலவச வர்த்தகக் கிடங்கு திட்டம்) 1000 கோடி முதலீடு என்று சொல்லப்பட்டு அதில், கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 350 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எம் ஆட்டோ (மின்சார வாகன தயாரிப்பு) திட்டத்திற்கு 100 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மூன்று ஒப்பந்தங்களும் இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துபாய் சுற்றுப்பயணம் மற்றும் ஒப்பந்தங்கள் இந்த நிலையில் இருக்கும் போது, அவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ”அவருக்கு முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது” என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி பயணத்தில் 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தத்தை பல்வேறு நிறுவனங்கள் செய்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.6,100 கோடி ஆகும். இதன் மூலம் 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.