மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பில் ஜெயலலிதா பெயர் நீக்கம்..! திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல், “புறநகர் பேருந்து நிறுத்தம்” என்று மட்டுமே அறிவிப்பு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்கம்
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜெயலலிதா பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ இரயில் லிட், - கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ இரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், வட சென்னை மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.
மெட்ரோ ரயிலை துவக்கிய ஜெயலலிதா
21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் - லிட்டில் மவுண்ட் வரையான முதல் மெட்ரோ போக்குவரத்தினை, மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்துடன் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் 1-ன், ரூ.18,380 கோடி மதிப்பீட்டில் 45.1 கி.மீ. நீளத்திலான பணிகள் முடிவடைந்தன. திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ இரயில் கட்டம்-1-ன் நீட்டிப்பு வழித் தடத்தினை 14.02.2021 அன்று எனது முன்னிலையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9.051 கிலோ மீட்டர் நீட்டிப்பு பணிகள் முழுமையடைந்து மெட்ரோ ரயில் கட்டம்-1 மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது. 21.11.2020 அன்று மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் எனது முன்னிலையில், சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ இரயில் கட்டம் - 2 திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்கள்.
ஜெயலலிதா பெயர் இருட்டடிப்பு
இவ்வாறு Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனப் பணிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றால் அது மிகையல்ல. ஆனால், இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக மாண்புமிகு அம்மா அவர்களது பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம்.
ஜெயலலிதா பெயர் அறிவிப்பதில்லை
சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது தமிழக அரசு சூட்டிய “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ இரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல், “புறநகர் பேருந்து நிறுத்தம்” என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ இரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. மாண்புமிகு அம்மா அவர்களது பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
போராட்டம் நடத்தப்படும்- இபிஎஸ் எச்சரிக்கை
எனவே, உடனடியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தையும், விடியா தி.மு.க. அரசையும் வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யாமல், தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மோடி தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் - சீமான் ஆவேசம்