கண்ணும் இமையும், நகமும் சதையும் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுவதாக அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார். 

கண்ணும் இமையும், நகமும் சதையும் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுவதாக அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது வெளியே தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி, அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது அக்கட்சியில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும், கட்சியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடு. கண்ணும் இமையும், நகமும் சதையும் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுகிறார்கள். ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. ஒற்றைத் தலைமை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23 ஆம் தேதி நடைபெறும். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் ஒரே தலைமை என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாநகரம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும் பரபரப்பான போஸ்டர்களை காண முடிந்தது. இந்நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசிக்கப்படவில்லை. இரட்டைத் தலைமையே இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.