திருவண்ணாமலை

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் என்னுடைய ராஜிநாமா முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளேன் என்று கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறினார்.

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், என்னுடைய பதவியை ராஜிநாமா செய்வேன்" என்று திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் கலசப்பாக்கம் தொகுதி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனது முடிவை எம்எல்ஏ பன்னீர்செல்வம் நேற்று மாற்றிக் கொண்டார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வியாழக்கிழமை மாலையில் என்னிடம் பேசினர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப் போகிறோம். 

இதற்கு, என்ன பதில் என்பது திங்கள்கிழமை கிடைத்துவிடும். அதன்பிறகு ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் ஒரு முடிவு எடுத்து செயல்படலாம். நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறினர். 

எனவே, தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்னுடைய ராஜிநாமா முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளேன்" என்று அவர் கூறினார்.