குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'கற்றல், கற்பித்தல், தலைமையேற்றல்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.. இதில் பங்கேற்பதற்காக பாஜக  தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்து கவர்னர் மாளிகையில் தங்கினார். 

அப்போது அமித்ஷாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர். 'நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு  33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என அமித்ஷா திட்ட வட்டமாக கூறியுள்ளார். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்  என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனாலும் இந்த இரு கட்சிகள் இடையேயான கூட்டணி தொடர்கிறது. மத்திய அரசு மக்களவையில்  அறிமுகம் செய்த முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. 

சமீபத்தில் நடந்த வேலுார் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக வேலுார் மாவட்ட பா.ஜ. நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி ஹிந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைத்தனர். 

எனவே அ.தி.மு.க. - பா.ஜ. இடையேயான புரிந்துணர்வு நன்றாகவே உள்ளது. வேலுார் தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும் தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி தரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வேலூர் தேர்தல் இபிஎஸ் – ஓபிஎஸ்க்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடர வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதன்மூலம் தமிழக கிராமங்களில் பாஜக  காலுான்ற வேண்டும் என்று  அமித்ஷா உறுதியாக உள்ளார். 

எனவே 'உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்' எனறு தன்னை சந்தித்த முதல்வரிடம், அமித்ஷா கடும் நிபந்தனை விதித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 

கூட்டணி தொடரும் பட்சத்தில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தயவு தேவைப் படுவதால் அ.தி.மு.க.வும் அமித்ஷாவின் நிபந்தனைக்கு ஓகே சொல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.