மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என அனைத்து மாநில தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.  மே மாத இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே 2 கட்ட தளர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  

அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பயணம் மேற்கொள்ள இ பாஸ் வாங்குவது கட்டாயமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் ஒன்று முதல், தனிநபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மாநில அரசு தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்கள். குறிப்பாக தமிழகத்தில் தற்போது இபாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அதேபோல், பல்வேறு மாநிலங்களும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இன்னும் கட்டுப்பாடுகளும், தடைகளும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜாய் பல்லா தற்போது மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை என குிப்பிட்டுள்ளார். மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுவதாகவும், வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.