முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. கைகளை கழுவதும், சானிடைசர்களை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்; கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை இன்று உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வேன். உங்களின் ஆலோசனை, எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்பதற்கு பயனளிக்கும். கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். அனைத்து வகையான போக்குவரத்தும் துவங்கிய நிலையில், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. 

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. அரசு அறிவித்துள்ள விதிகளை முறையாக மக்கள் கடைபிடித்தால் கொரோனாவை ஒழித்துவிடலாம். முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. கைகளை கழுவதும், சானிடைசர்களை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கொரோனா தொடர்பான  ஒவ்வொரு உயிரிழப்பும் வருத்தம் அளிக்கிறது. நாட்டில் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 50 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. குறைவான இறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அனைவரின் உயிரையும் காப்பாற்றவே அரசு முயல்கிறது. விவசாய பொருட்களின் விற்பனையில் சீர்திருத்தங்கள் செய்திருப்பதால், வேளாண் துறை வளர்ச்சி பெறும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுகுறு தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருந்தது. வர்த்தகம் மீண்டும் வேகம் அடைய நாம் அனைவரும் போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.