அமலாக்கதுறையை பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார்  வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்?

தமிழக பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை போன வேகத்திலேயே திரும்பி வந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என ஜோதிமணி கூறியுள்ளார். 

இதுவரை திமுகவினர் தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதன்முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை வந்த வேகத்திலேயே திரும்பியதாகவும் வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்? என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ்(டுவிட்டர்) தளத்தில்;- தமிழக பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டுக்குச் சென்றதும், சென்ற வேகத்திலேயே திரும்பி வந்ததும் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இந்த ரெய்டின் காரணம் என்ன? மணல் வியாபாரிகளிடம் இருந்து மாதம் 50 லட்சம் ரூபாய் அவர் பெயரில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது உண்மையா? 

Scroll to load tweet…

அதுதொடர்பாக விசாரிக்கத்தான் அமலாக்கத்துறை அவர் வீட்டுக்குச் சென்றதா? அந்தப் பணத்தைப் பெற்றதில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்புள்ளதா? இல்லையென்றால் ஏன் அமலாக்கத்துறை போன வேகத்திலேயே திரும்பி வரவேண்டும்? அமலாக்கதுறையை பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.