7 மணி நேர கிடுக்கிப் பிடி கேள்விகளால் திணறிய தினகரன்…இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு…

இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரின் சரமாரியான கேள்விகளால் திணறிய நிலையில் அன்றும் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர் என்ற அரசியல் தரகரரை, டெல்லி போலீசார் 1 கோடியே 30 லட்சத்துடன் பணத்துடன்  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டெல்லி சாணக்கியபுரம், காவல் நிலையத்தில் தினகரனிடம் நேற்று 7 மணி நேரத்துக்கு மேலராக விசாரணை நடைபெற்றது. சுகேஷ் சந்திரசேகர், தினகரன் ஆகிய இருவரையும் எதிரெதிரே வைத்து இந்த விசாரணை நடைபெற்றது.

இதே போல் டி.டி.வி.தினகரனின் உதவியாளர்கள் மல்லிகார்ஜுன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் தினகரனை இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று நண்பகல் டிடிவி தினகரன் டெல்லி சென்றடைந்தார். அவர் பிற்பகல் 3 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையின் போது தினகரன் அளிக்கும் பதிலை பொறுத்து அவரை உடனடியாக கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.