தமிழ்நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் தென் மண்டல மக்களின் பிரதான பிரச்னைகள், அரசியல் கட்சிகளுக்கான அந்த பகுதி மக்களின் ஆதரவு குறித்த ஆய்வு முடிவுகளை கடந்த பதிவுகளில் பார்த்தோம்.

தற்போது AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு வட மாவட்டங்களில் நடத்திய ஆய்வு முடிவுகள் குறித்து பார்ப்போம். 

வட மாவட்டங்கள்:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது வட தமிழகம். 

சென்னையின் கள நிலவரத்தை தனியாக அலச உள்ளதால், சென்னை தவிர்த்து மற்ற வட மாவட்டங்களின் ஆய்வு முடிவுகளை பார்ப்போம்.

பிரச்னைகள் மற்றும் தேவைகள்:

குடிநீர், பாசன நீர் மற்றும் உயர்கல்வி வசதிகள் ஆகியவற்றை வட மாவட்ட மக்கள் பிரதான பிரச்னைகளாக குறிப்பிட்டுள்ளனர்.

குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய வேண்டும் என 19% மக்களும் உயர்கல்வி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என 14% மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்திற்கு முறையான பாசன நீர் கிடைக்கவில்லை என 15% மக்கள் குறை கூறியுள்ளனர். விலைவாசி உயர்வு பெரும் பிரச்னையாக இருப்பதாக 11% மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் சந்தித்துவரும் இந்த பிரச்னைகள் அனைத்தும் இனிவரும் தேர்தல்களில் எதிரொலிக்கும். 

ஆதிக்க சமூகம்:

வட தமிழகத்தில் வன்னியர், தலித், முதலியார் சமூகத்தினர் பெருவாரியாக உள்ளனர். 

மக்களின் ஆதரவு:

வன்னியர்:

வன்னியர் சமூகத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திமுகவிற்கு 28% ஆதரவும் அதிமுகவிற்கு 23% ஆதரவும் உள்ளது. அன்புமணி ராமதாஸ் இதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாமகவிற்கு 20% வன்னியர் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்திற்கு 7% மற்றும் கமல்ஹாசனுக்கு 4% ஆதரவு உள்ளது. 

முதலியார்:

முதலியார் சமூகத்தினரில் 29% பேர் திமுகவிற்கும் 26% பேர் அதிமுகவிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்திற்கு 15% மற்றும் கமல்ஹாசனுக்கு 6% முதலியார் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தலித்:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவு திமுகவிற்கே அதிகமாக உள்ளது. 39 சதவிகித்தினர் திமுகவிற்கும் 21 சதவிகிதத்தினர் அதிமுகவிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்திற்கு 14% தலித் மக்களின் ஆதரவும் கமல்ஹாசனுக்கு 4 சதவிகித்தினரின் ஆதரவும் உள்ளது. 

ஒட்டுமொத்தமாக பார்த்தால், மத்திய மாவட்டங்களை போலவே வடமாவட்டங்களிலும் அதிமுகவைவிட திமுகவிற்கு அமோக ஆதரவு உள்ளது. திமுகவிற்கு 34% வடமாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் வட தமிழகத்தில் திமுக 22% வாக்குகளைத்தான் பெற்றது. தற்போது 12% அதிகமான ஆதரவை திமுக பெற்றுள்ளது. 

2014 மக்களவை தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக 45% வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது வெறும் 25% பேர் மட்டுமே அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2014 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இது 20% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

வட தமிழகத்தில் ரஜினிகாந்திற்கு 7% மற்றும் கமல்ஹாசனுக்கு 4% ஆதரவும் கிடைத்துள்ளது.