சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்  என  மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி நடந்த  உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்திற்கு 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களை கொண்டு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு செய்யப்படுவர்.  ஆனால் போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தொடர்ந்து  தள்ளிவைக்கப்பட்டு வந்துள்ளது. 

இதையடுத்து,  சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து  தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, செந்தில் குமார் உட்பட 8 உறுப்பினர்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் எப்போது நடத்தப்படும் என  விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு (11-11-2020) நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு வாரங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். 

அதனை பதிவு செய்து கொண்ட  வழக்கை முடித்து வைத்த நீதிபதி,சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.