வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். 

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு, இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் இன்று தனது வேட்புமனுவை ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்தார். வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான திரு.சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் இன்றே தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.  

முன்னதாக மோடியிடம் சொல்லி தேர்தல் நடத்தச் சொன்னதாக ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்த கருத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மோடி என்ன தேர்தல் ஆணையரா? இந்தத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததா? இல்லை மோடி அறிவித்தாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.