தேர்தல் தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் தேவை என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு தேவை. சுதந்திரமாக செயல்பட நிரந்தர தலைமைச் செயலகம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், அவர்களை தடுக்க முடியாமல் திணறி வருகிறோம். இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. எங்களுக்கு பின்னால் இருந்து நிர்பந்திக்கிறார்கள். மேலும் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 

எனவே, போதிய அதிகாரம் இல்லாததால் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற சமயங்களில், அரசு சட்டம் இயற்றத் தேவை எழாமல், தேர்தல் ஆணையமே புதிய சட்டங்களை இயற்ற அதிகாரம் தேவை. எங்கள் பணியை சுதந்திரமாகவும், சுமூகமாகவும் செயல்படுத்த முடியவில்லை. நாங்கள் பல் இல்லாத பாம்பாக செயல்படுகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடுகளும் குறுக்கீடுகளும் உள்ளன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையமே அதை ஒப்புக்கொள்ளும் வகையில், தங்களுக்கு போதுமான அதிகாரம் இல்லை எனவும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.