election commission allot jaishankar hat insted of mgr hat
மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுத்தால் போதும் என்று சில மாமியார்கள் செயல்படுவார்கள்.

அதுபோல, ஆர்,கே.நகர் தேர்தலில் அதிமுக தோற்றாலும் தோற்கட்டும், எதிர்தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இரு தரப்புமே கவனமாக இருந்தன.
அதற்கேற்ப, இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் வழங்காமல் முடக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.
இதில் பன்னீர் அணிக்கு ஏக குஷியாக இருந்தாலும், சசிகலா அணி, நிலைகுலைந்து போயுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
இருந்தாலும், பன்னீர் அணிக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லையே, என்ற ஒரு அற்ப சந்தோஷத்தில் இருக்கிறது சசிகலா அணி.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதோடு, தேர்தல் ஆணையம் விட்டுவிடும் என்று பார்த்தால், கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும் தடை விதித்துவிட்டது.
அதனால் வேறு வழியின்றி, பன்னீர்செல்வம் தரப்பு, "அதிமுக புரட்சித்தலைவி அம்மா" என்ற பெயரிலும், சசிகலா தரப்பு, "அதிமுக அம்மா" என்ற பெயரிலும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளன.
சரி, சின்னமாவது விரும்பியபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்து, கிரிக்கெட் பேட், ஆட்டோ, தொப்பி என மூன்றில் தொப்பி சின்னத்தை தேர்வு செய்தது சசிகலா அணி.
எம்.ஜி.ஆரின் அடையாளமான தொப்பி சின்னமாகக் கிடைத்ததில் அந்த அணிக்கு ஏகப்பட்ட சந்தோசம். ஆனால் அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை.
காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொப்பி எம்.ஜி.ஆர் அணியும் தொப்பி வடிவத்தில் இல்லாமல், எங்க பாட்டன் சொத்து படத்தில் ஜெய் சங்கர் அணியும் தொப்பியாக அமைந்து விட்டது.
அதனால், எம்.ஜி.ஆர் தொப்பி கேட்டால், ஜெய் சங்கர் தொப்பி கொடுத்து ஏமாற்றி விட்டீர்களே என்று, தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வெறியில் புலம்பிக் கொண்டிருக்கிறது சசிகலா அணி.
ஆனாலும், நாம் என்ன மக்களின் அன்பை பெற்றா தேர்தலை சந்திக்கிறோம்? அவர்கள் மனமுவந்து வாக்களிக்க போகிறார்களா என்ன? என்று தினகரன் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசிவருகின்றனர்.
மேலும், கொட்ட வேண்டியதை கொட்டி அள்ள வேண்டியதை அள்ளப்போகும் நமக்கு எந்த சின்னம் கிடைத்தால் என்ன? என்றும் தினகரனை அவரது ஆதரவாளர்கள் தேற்றி வருவதாக தகவல்.
