தங்களுக்கு சாதகமாக செயல்பட தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளை கழகமா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என்று தினகரனும், மு.க.ஸ்டாலினும் போடும் கணக்கு பொய் கணக்கு. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போடும் கணக்கு தெய்வக்கணக்கு என்றார். 

மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தோல்வி அடையப் போவதை தெரிந்தும் தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டு வருகின்றனர். எங்களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளைக் கழகமா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அதிமுக அரசுக்கு தேர்தல் ஆணையம் எந்த வகையிலும் ஆதரவாக செயல்படவில்லை. மோடியின் திரைப்படத்தைக் கூட வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்படுகின்றது என்றார். 

முன்னதாக மீனவர்களிடம் வாக்கு சேகரித்த ராஜேந்திரபாலாஜி, அவர்களின் குறைகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் மீனவர் ஒருவரின் படகை அவரே ஓட்டி சென்று அருகிலுள்ள முயல் தீவுக்குச் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.