சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் ஜெஜெ டிவிக்கு 1996-97 ஆகிய ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெஜெடிவி நிறுவனம், பாஸ்கரன், சசிகலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவையும் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சசிகலாவின் உடல்நிலையும், வயதையும் காரணம் காட்டி ஆஜராகவில்லை. இதையடுத்து சசிகலா மீது பெங்களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

அப்போது சசிகலா நான் எந்த குற்றமும் செய்யவில்லை என் மீதான குற்றத்தை முழுவதும் மறுக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து தான் அமலாக்கத்துறை சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்கும் ஒப்புகொள்வதாக கூறினார். அதன்படி அமலாக்கத்துறை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு சசிகலா தரப்பினர் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை. மேலும் சசிகலாவும் குற்றச்சாட்டு பதிவிற்கு பின்பு கையெழுத்திடவில்லை. வழக்கு விசாரணையும் முறையாக நடக்காமல் தள்ளிபோய் கொண்டே உள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி குற்றச்சாட்டு பதிவுக்கு பின்னர் சசிகலா கையெழுத்திடவில்லை. மேலும் சசிகலா தரப்பும் சரியாக விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். அதனால் சிறையில் இருக்கும் சசிகலாவை மறு குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு. பிடி வாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். டிசம்பர் 13-ல் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.