சென்னை எழும்பூர் களநிலவரம்..! ஜான் பாண்டியன் VS பரந்தாமன்..! வெற்றி யாருக்கு?
தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுவதால் சென்னை எழும்பூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுவதால் சென்னை எழும்பூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமன் திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். கடந்த முறை பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியாக கருதப்பட்ட பூந்தமல்லியில் கடந்த முறை திமுக தோற்க காரணமே வேட்பாளர் தேர்வு தான் என்று லோக்கர் திமுக பிரமுகர்கள் வெளிப்படையாகவே பேசினர். அந்த அளவிற்கு தேர்தல் பணிகளில் அனுபவம் இல்லாதவராக பரந்தாமன் இருந்திருக்கிறார். இதே நிலை தான் தற்போது எழும்பூர் தொகுதியிலும் திமுக தரப்பில் காணப்படுகிறது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு வாரம் கழித்தே பரந்தாமன் எழும்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை துவக்கினார். இதற்கு காரணம் தேர்தல் செலவுகளுக்கு பரந்தாமன் திமுக மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவை சார்ந்திருப்பது தான் என்கிறார்கள். கையில் பணம் இல்லை என்பதால் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செலவழிக்கும் நிலையில் பரந்தமான இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் தொகுதியில் கூட்டணிக்கட்சியினரை அவரால் திருப்திபடுத்த முடியவில்லை. மேலும் பரந்தாமன் பிரச்சாரத்திற்கு செல்லும் போது மிகவும் எளிமையான முறையை பின்பற்றுவதாக அவர் தரப்பில் கூறினாலும் செலவுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தான் திமுக வேட்பாளர் தரப்பில் கூட்டத்தை சேர்க்கமுடியவில்லை என்கிறார்கள்.
இது தவிர பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணிக்கட்சியினரை பூத் கமிட்டியில் சேர்ப்பது போன்ற பணிகளிலும் பரந்தாமன் தரப்பில் சுணக்கம் உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆரம்பம் முதலே அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் தரப்பு தேர்தல் பணிகளில் அசத்தி வருகிறது. பிரச்சாரம் என்றால் பெருங்கூட்டத்துடன் செல்வது, கூட்டணியில் உள்ள கட்சித் தொண்டர்களை அரவணைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது, கூட்டணிக்கட்சியினருக்கு செலவு விஷயத்தில் தாராளம் காட்டுவது, பூத் கமிட்டியை துவக்கத்திலேயே அமைத்து முடித்துவிட்டது என ஜான் பாண்டியன் தரப்பு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
இதுதவிர எழும்பூர் தொகுதி தற்போது திமுகவின் சிட்டிங் தொகுதியாகும். இது இரண்டு விஷயத்தில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஒன்று கடந்த முறை திமுக வெற்றி பெற்று அக்கட்சியை சேர்ந்தவர் எம்எல்ஏ ஆன நிலையிலும் தொகுதிக்கு என்று எதுவும் பெரிதாக செய்யவில்லை. எதிர்கட்சி எம்எல்ஏ என்பதால் சாலைவசதி, குடிநீர் வசதி போன்றவற்றில் எழும்பூர் தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. இதே சமயம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ரவிச்சந்திரனுக்கு திமுகவினர் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. அவருக்கு சீட் வழங்கப்படாதது உள்ளூர் கட்சிக்காரர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
கடைசி வரை ரவிச்சந்திரன் ஆதரவு திமுகவினர் தற்போதைய வேட்பாளர் பரந்தாமனுக்காக தேரதல் பணிகளில் ஈடுபடவில்லை. மேலும் மாவட்டச் செயலலாளர் சேகர்பாபு ரவிச்சந்திரனை ஓரங்கட்டி பரந்தாமனுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளதால் அவரை தோல்வி அடையச் செய்ய திமுகவின் ஒரு தரப்பு உள்ளடி வேலைகளை தொடங்கியுள்ளது. இந்த இரண்டு விஷயங்களும் எழும்பூரில் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது. அதே போல் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் தலைவர்களில் ஒருவராக ஜான் பாண்டியன் பார்க்கப்படுவது தொகுதியில் அவருக்கு வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.