நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக தமிழகத்திற்கு கண்டிப்பாக விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின்படி படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஓர் அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என தமிழக அமைச்சர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமரை நேரில் வலியுறுத்தினர்.

ஆனால் இன்று பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கே கிடையாது என தெரிவித்தார்.

இதனால் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் நீட் விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க இன்று இரவு டெல்லி செல்கின்றனர்.

டெல்லி செல்லும் முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக தமிழகத்திற்கு கண்டிப்பாக விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பொறியியல் தேர்வுக்கும் இப்போது உள்ளது போலவே பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து தேர்வு செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வு வேண்டாம் என்பதை வலியுறுத்துவோம் எனவும் அன்பழகன் குறிப்பிட்டார்.