சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 35 தொகுதிகள் வரை பாமக கேட்பதாகக் கூறப்பட்ட நிலையில், 23 தொகுதிகளுக்கு பாமக சம்மதித்துள்ளது. பாமக கோரிய வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றியதால், குறைந்த தொகுதியில் போட்டிட சம்மதித்தோம் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தெரிவித்திருந்தார்.
ஆனால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட தொடங்கியதிலிருந்து முதன் முறையாக மிகக் குறைந்த தொகுதியில் போட்டியிட உள்ளது இதுதான் முதன்முறை. முதன்முறையாக 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. ஜெயலலிதா பாமகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கினார். அந்தத் தேர்தலில் அதிக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தபோதும் பாமகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக, 30 தொகுதிகளில் போட்டியிட்டது.முந்தையத் தேர்தலைவிட கூடுதல் தொகுதியில் பாமக போட்டியிட்டது.
இதனையடுத்து 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக, 31 தொகுதிகளில் போட்டியிட்டது. 2006 தேர்தலைவிட ஒரு தொகுதியில் கூடுதலாக பாமக போட்டிட்டது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்ட பாமக, படுதோல்வியடைந்தது. அதனால், மீண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்குத் திரும்பிய பாமக, இந்தத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட அதிமுகவுடன் தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்துள்ளது.


இதன்மூலம் திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் முதன்முறையாக குறைந்த தொகுதியில் பாமக போட்டியிடுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்தபோது கூட்டணியில் இடம்பெற்று அதிக தொகுதியில் போட்டியிட்ட பாமகவை, எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறைந்தத் தொகுதியில் போட்டியிட சம்மதிக்க வைத்தது ஒரு வகையில், அவர்களுடைய ராஜ தந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.