தனது தம்பியை எப்படியும் எம்.பியாக்கியே தீரவேண்டும் என நினைத்த பிரேமலதாவின் திட்டம் பலிக்காததால் தற்போது அன்புமணி ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றம் செல்வதால் பிரேமலதா கடும் மன உளைச்சலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் முதலில் கூட்டணி அமைத்தது பாமக. அக்கட்சிக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக ஒதுக்கியது. தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பெரும் இழுபறிக்கு பின்பே அதிமுகவுடன் கூட்டணி முடிவானது. இதற்கு காரணம் பாமகவுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. பாமகவை விட கூடுதலாக ஓட்டு வங்கி வைத்துள்ளோம். ஆகையால் அக்கட்சிக்கு ஒதுக்கியதை விட கூடுதல் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க வேண்டும் என பிரேமலதா பிடிவாதம் காட்டி வந்தார். 

ஒருவேளை மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ராஜ்யசபா மூலம் செல்வதே பாமகவின் திட்டம். அதே போலத் தான் தனது தம்பி எல்.கே.சுதீஷ் தோற்றால் ராஜ்ய சபா மூலம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம் என்கிற திட்டத்தில் இருந்தார் பிரேமலதா. ஆனால் அதிமுக கடைசியாக 4 மக்களவை தொகுதிகளையே ஒதுக்கியது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதிமுக கூட்டணியில் தேனியை தவிர எந்தத் தொகுதியிலும் இந்தக் கூட்டணி வெற்றிபெறவில்லை. குறிப்பாக பாமக, தேமுதிக படுதோல்வியை அடைந்தது.

அன்புமணி தர்மபுரி தொகுதியிலும், விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் மண்ணைக் கவ்வினர். தேர்தல் களத்தில் அன்புமணி படுதோல்வி அடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த நிலையில் கொல்லைப்புறமாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். ஆனால், தனது தம்பியை கொல்லைப்புறம் வழியாகவும் அனுப்ப முடியவில்லையே. எடப்பாடி அதற்கும் வழிவிடாமல் செய்து விட்டாரே என பிரேமலதா புலம்பித்தவித்து வருகிறார் என்கிறார்கள் கோயம்பேடு கட்சி நிர்வாகிகள்.