தமிழக அரசோடு மத்திய அரசு ‘நண்பேன்டா!’ போக்கை கடைப்பிடித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது, முதல்வரையே முரட்டுத்தனமாக மிரட்டுகிறது டெல்லி லாபி!.... என்று ஆதங்கப்படுகிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில். 

பிரச்னை இதுதான்...எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனி அணியாய் நின்றால் ஒரு சீட் கூட பி.ஜே.பி.க்கு கிடைக்காது என்று சமீபத்திய சர்வேக்கள் அனைத்துமே ஆணி அடித்தாற்போல் சொல்லிவிட்டன. விளைவு, தி.மு.க. அல்லது அ.தி.மு.க. இருவரில் ஒருவருடன் கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தி இருக்கிறது தேசத்தையே ஆளும் பி.ஜே.பி. சர்வேக்களின் முடிவுப்படி செல்வாக்கு அதிகமாக இருக்கும் தி.மு.க.வுடன் கூட்டு வைக்க பி.ஜே.பி. எடுத்த முடிவுகள் அத்தனையுமே வீண். 

‘செத்தாலும் உன் கூட கூட்டு இல்லை. போ!’ என்று மூஞ்சில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார் ஸ்டாலின். விளைவு, ஏற்கனவே எதிர்பார்த்தபடி அ.தி.மு.க. பக்கம் ஓவர் எதிர்பார்ப்பை காட்டி நின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ‘ரெய்டு, வழக்கு’ ஆகியவற்றை காட்டி தங்களை மிரட்டும் பி.ஜே.பி.யை பெண்டு கழட்ட இதுதான் சரியான தருணமென முடிவெடுத்தார் பழனிசாமி, பி.ஜே.பி.யின் ஆணவ போக்கு குறித்து அமைச்சர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்துடன் பேசி வந்தார். இது சில ஸ்பைகளின் வழியே டெல்லியின் கவனத்துக்கு போனது. தன்னால் அடக்க முடியாத ஸ்டாலின் பேசியதை கூட  பெரிதாய் எடுத்துக்காத பி.ஜே.பி, தன்னால் பிழைக்கும் மைனாரிட்டி அ.தி.மு.க. அரசே இப்படி அலட்சியமாய் பேசியதால் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டது. 

டெல்லி லாபிக்கு கண்கள் சிவந்து, ரத்தம் சூடேறிவிட்டது. ’முதல்வர்கள் முதல் எக்ஸ் கவுன்சிகலர்கள் வரை அந்த கட்சியை ரெய்டுல புரட்டிப் போடலாமா? சிக்குனவனையெல்லாம் உள்ளே தள்ளி, தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைப்போம்!’ என்று சில தலைவர்கள் கொதித்தனர். ஆனால் அமித்ஷாவோ ‘அப்படி செஞ்சால் வீணாக மக்களோட வெறுப்பை நாமளும், பரிதாபத்தை அந்த கட்சி ஆளுங்களும் சந்திப்பாங்க. வேற வகையிலதான் இதை டீல் பண்ணணும்.’ என்றார்.

இதையடுத்துதான் ’எதிர்காலத்தில் நிச்சயம் உதவும்’ என்று ஏற்கனவே மேத்யூஸ் மூலம் எடுத்து வைக்கப்பட்டிருந்த ‘கொடநாடு கொள்ளை, கொலைகள்’ குறும்படம் அவசர கதியில் வெளியக தயாரானது. இதை சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது ஸ்பை மூலம் தெரிந்து கொண்ட எடப்பாடியார், ’தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சியுடன் கூட்டணி இல்லை!’ என்று கஜா புயல் சேதத்தை பார்க்க வராத மோடியை மனதில் வைத்து வெளிப்படையாக பேசி தீர்த்துவிட்டார். 

இது டெல்லியின் கவனத்துக்கு போனதும், மேத்யூஸை உடனடியாக குறும்படத்தை வெளியிட சொன்னவர்கள், சயான் மற்றும் வாளையார் மனோஜ் சாமி இருவரையும் வைத்து டெல்லி பிரஸ் கிளப்பில் பேட்டியும் கொடுக்க வைத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமியை வைத்து தீட்டித் தள்ளினர். டெல்லி பிரஸ் மீட்டானது முழுக்க முழுக்க டெல்லி அதிகார மையத்தின் ஆசியோடுதான் நடந்தது! என்று தமிழகத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

இந்த செயல்களை தன்னை மிரட்டும் ஆயுதங்களாகவே பார்க்கிறார் எடப்பாடி. டெல்லி நினைத்தது போலவே ‘கொலை, கொள்ளை புகார்களில் சிக்கியுள்ள இந்த கிரிமினல் கேபினட் உடனே பதவி விலக வேண்டும்.’ என்று ஸ்டாலினும் அதிரடியாய் அறிக்கைவிட்டார். இதை எடப்பாடியிடம் சுட்டிக்காட்டிய டெல்லி லாபி, ‘சட்டமன்ற எதிர்கட்சி தலைவரின் இந்த அறிக்கை அரசியல் தாண்டி நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அடிப்படையாக வைத்து நம்பிக்கை இல்லா தீர்மானமே கொண்டு வர முடியும். நாங்கள் கை கொடுப்பதை நிறுத்தினால், உங்கள் மைனாரிட்டி கவர்மெண்டு நிச்சயம் கவிழும்? எப்படி வசதி?’ என்று தூதுவர் மூலம் ஓப்பனாகவே கேட்டுவிட்டார்களாம். 

பல்லைக் கடித்த பழனிசாமி ‘என்ன மிரட்டுகிறீர்களா?’ என்று கேட்க, ‘பயமில்லாவிட்டால் ஏன் மிரளுறீங்க?’ என்றார்களாம். எடப்பாடி இப்போது கூட்டணிக்கு சம்மதித்தால் சீட்களின் எண்ணிக்கை, இஷ்டப்படும் தொகுதிகள் என எல்லாவற்றிலும் பி.ஜே.பி. வைப்பதுதான் வரிசை! என இருக்கப்போகிறது. தான் இப்படி நெருக்கடிக்கு ஆளாவதை வெளியே சொல்லவும் முடியாமல், அதேவேளையில் மக்களின் மனதுக்கு விருப்பமில்லாத பி.ஜே.பி.யுடன் கூட்டணியும் வைக்க மனமில்லாமல் ரெண்டுக்கும் நடுவில் மாட்டி தவிக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதேவேளையில் கூட்டணியில் முரண்டு காட்டினால்....கொடநாடு ஆவணப்படத்தை அடிப்பையாக வைத்து கைது பயம் காட்டிடக் கூட தயங்காது டெல்லி! என்கிறார்கள் விமர்சகர்கள். எடப்பாடி நினைப்பது போல் ‘தை பிறந்த பின் வழி பிறக்குமா புதிதாக?’