அதிமுக தலைமைக் கழகம் அருகே பொதுச்செயலாளர் எடப்பாடியாரே, வருக.. வருக... என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் வருத்ததில் உள்ள சில அதிமுக நிர்வாகிகள் ஒற்றை தலைமை வேண்டும் என காய் நகர்த்தியுள்ளார் . இதன் காரணமாக இன்னும் சற்று முன்பு தொடங்கிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புயல் கிளம்பும் என கூறப்படுகிறது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்தன. இதற்கு அதிமுகவில் உள்ள உள்கட்சி கோஷ்டி பூசல், உள்ளடி வேலைகள் தான் காரணம் என நிர்வாகிகளுக்குள் கலவரம் வெடித்தது. இதனால் தவறு இழைத்தவர்கள் மீது உறுதியான முடிவு எடுக்க இரட்டை தலைமை சரிவராது என்றும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என தனித்தனியாக செயல்படுவதையும் அதிமுக நிர்வாகிகள் பலர் விரும்பாததால் மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரன் உள்பட பலர் வெளிப்படையாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என  அடம்பிடித்து வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் வெளிப்படையாக தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து  வந்தநிலையில், எதிர்க்கட்சிகள் கேலி செய்யும் அளவிற்கு யாரும் வழி செய்துவிடக்கூடாது, வாயை மூடி பேசவும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இதனிடையே இந்த கூட்டத்தில், தேர்தல் தோல்வி, குடும்ப அரசியல், உள்கட்சிபூசல் , கோஷ்டி மோதல்கள் ஒற்றை தலைமை  உள்பட கட்சியில் நிலவும் பூசல்களுக்கு தீர்வு காணும் விதமாக  நடக்கும் என தெரிகிறது, சற்று முன்பு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கிய நிலையில்,  அந்த பகுதி முழுவதும் அதிமுக பொதுச் செயலராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், அதிமுகவின் புதிய கழகப் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வாருங்கள் மாண்புமிகு எடப்பாடியாரே, அதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு  இப்படிக்கு மாண்புமிகு அம்மாவின் உண்மை விசுவாசி கொளத்தூர் மீன் K.ஆறுமுகம் 65வது வட்டம் மேற்கு வடக்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி அதிமுக இப்படியான அந்த போஸ்டர் அதிமுக அலுவலகம்  சுற்றுவட்டார பகுதிகளில் ரணகளமாக்குகிறது.