தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் 3 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளார். அவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவாளர்கள் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். அதேநேரம், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு மாவட்டம், காங்கேயம் முன்னாள் எம்எல்ஏ செல்வி, திருப்பூர் வடக்கு தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சந்திரசேகர், மற்றும் கனிஷ்கா சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பல்லடம் நகர் ஹவுசிங் தலைவர் பானு பழனிசாமி, வட்டச்செயலாளர் கருப்பசாமி, தாராபுரம் முன்னாள் சேர்மன் கோவிந்தராஜன், மடிப்பாக்கம் சுரேஷ்பாபு, திருப்பூர் தலைமை பேச்சாளர்கள் வேங்கை விஜயக்குமார், பாரதிப்ரியன், மீசை சுப்பிரமணியன், வினோத், பாஸ் என்ற பாஸ்கரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்சை சந்தித்தனர்

.

 ‘நீங்கள்தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படவேண்டும். எங்களது கொங்கு மண்டலத்தில் இருந்து ஏராளமானோர் ஆதரவு தர உள்ளோம்’என இவர்கள் தெரிவித்ததாக கட்சியினர் கூறினர். இதனை தொடர்ந்து திருப்பூர் முன்னாள் எம்பி சிவசாமி, அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ மணிமேகலை ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, ராமநாதபுரம் மாவட்ட ஐ.டி விங்க் இணைச்செயலாளர்கள் அருள்முருகன், சோலைமுருகன், அம்மா சரவணன், வரதராஜன் என தொடர்ந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் முக்கிய நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தொடர்ச்சியாக ஓபிஎஸ்சை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர் செல்வம் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,   தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும்  அவ்வாறே இருக்கும். இந்நிலையில், ஓ.பி.எஸ் தனது டவிட்டர் பக்கத்தில், ‘’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என பதிவிட்டுள்ளார்.

 

கண்ணன் கீதையில் சொன்னாலும் இந்த உபதேசத்தை  சொன்னாலும், அவன் சொன்னதெல்லாம் எப்போதும் நடந்து விடுவதில்லை. எப்போதாவது தான் நடக்கிறது..! கண்ணன் என்ன சொன்னான்…? எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. அதாவது நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை.  நடந்ததெதுவும் நல்லதாக நடக்கவில்லை. ஆனாலும், நடந்ததெல்லாம் நன்மைக்கு தான். எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது… இப்போது நடந்து வருவது ஓரளவுக்கு சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. எது நடக்க இருக்கிறதோ – அதுவும் நன்றாகவே நடக்கும். எதிர்காலம் இனி நன்றாகவே நடக்கும். எனத் தெரிவித்துள்ளார்.  இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அதிமுகவினர் உணர வேண்டும்.

 

அதாவது, நடந்தவை எல்லாம் கெட்டவைகளாக எதிர்பாராதவைகளாக நடந்து விட்டது. இப்போது தான் எடுத்து வரும்முடிவுகள் நன்றாக நடந்து வருகிறது. இனி வரும் காலங்களில் நல்லதே நடக்கும் என ஓ.பிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கீதாச்சார சுட்டிக்காட்டல் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர வைத்துள்ளது. இதன் மூலம் தன் நிலைப்பாட்டை ஓ.பி.எஸ் மீண்டும் உறுதி செய்துள்ளார்.