edappadi shocked about admk alliance parties with stalin
சட்டசபையில் இன்று தனிநபர் தீர்மானம் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினுடன் கைகோர்த்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டிறைச்சி விவாகரம் இந்தியா முழுவதும் எதிர்ப்பலையை கிளப்பி வரும் வேளையில் பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
பாஜக ஆளும் கோவா மாநிலமே இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மறுபுறம் மேகாலயா மாநிலத்தில் பாஜகவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தென் மாநிலங்களில் பாஜக ஆதரவு தேவைப்படுவதால் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மட்டும் மாட்டிறைச்சி விவாகரத்தில் வாய் மூடி மவுனமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த பிரச்சனை இன்று சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
அதிமுகவின் கூட்டணி கட்சியான மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி மாட்டிறைச்சி விவகாரத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை இணைத்து எதிர்கருத்தை உருவாக்க முயன்று வருகிறார்.
மாட்டிறைச்சி விவாகரத்தில் சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மாட்டிறைச்சிக்கு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர் பேச வாய்ப்பு கேட்டனர்.
இதில், கருணாசுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பதிலளித்த எடப்படி மாட்டிறைச்சி விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப நல்ல முடிவு எடுக்கப்படும் என மழுப்பலான பதிலை தெரிவித்தார்.
குறைந்த பட்சம் பாஜக ஆளும் கோவாவை போல் எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டும் என கேட்டதிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிக்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

அவர்களோடு சேர்ந்து அதிமுக கூட்டணி தலைவர்களான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையில் கூட்டணி கட்சிகள் என்பது ஊசி முனை அளவு கூட ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பை காட்டாமல் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக நடந்து கொண்டனர்.
ஆனால் தற்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களான மனித நேய ஜனநாயக கட்சி தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தனியரசு ஆகியோர் தமிழக அரசுக்கு எதிராக வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
