edappadi said Rs 10 lakh compensation will be given to the fishermans family

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.5000 நிவாரணம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். 

சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர். இவர்களை மீட்க கப்பல் படையும் கடலோர காவல் படையும் விரைந்துள்ளன. 

இந்நிலையில், கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 8 மணி நேரமாக ரயில் மறியல் போராட்டம் நீடிப்பதால் கன்னியாகுமரி ஆட்சியர் மீனவர்கள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

முதலமைச்சர் இங்கு வந்தால் மட்டுமே இடத்தை விட்டு நகருவோம் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். மேலும் தங்களுக்கு உதவாத முதலமைச்சர் எதற்கு எனவும் கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.5000 நிவாரணம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லாம் மீனவ குடும்பத்திற்கும் ரூ.2500 நிவாரணம் வழங்கப்படும் என்றும் உணவு படியாக மீனவர்களுக்கு ரூ. 2000 ஆக உயர்த்தியும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

பாதுகாப்பாக உள்ள மீனவர்களின் விவரங்களை பத்திரிக்கை மூலம் உறவினர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெளியிட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டுள்ளார்.