அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி.! பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உற்சாகத்தில் இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவை வெளியிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகம் அடைந்தனர். ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் மூழ்கினர்.
தொண்டர்கள் உற்சாகம்
தீர்ப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் அண்ணா தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கழகமான எம்.ஜி.ஆர் மாளிகை வந்தார். அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளின் பாதங்களுக்கு மலர் தூவி வணங்கினார். இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் இருவரும் அறிவித்தார்கள். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளால் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
தீர்ப்பு வெளியானதையடுத்து தனது டுவிட்டர் பக்க பயோவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற வார்த்தை மாற்றப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் என புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என பதிவு செய்து வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்