முதல் முறையாக டிவிட்டர் ஸ்பேஸில் பேசும் எடப்பாடி பழனிசாமி... உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!!
டிவிட்டர் ஸ்பேஸ் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
டிவிட்டர் ஸ்பேஸ் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமையில் ஆரம்பமான பிரச்சனை ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. பின்னர் பல்வேறு பிரச்சனைகள் இருந்த வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. அங்கு தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதில், பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா.? எத்தனை இடத்தில் போட்டி.? அமித்ஷாவுடன் பேசியது என்ன.? அண்ணாமலை பரபரப்பு தகவல்
இந்தத் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் முதலில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம். ஆனால், முடிவு அறிவிக்கக் கூடாது என் உத்தரவிடப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: From The India Gate: தெலுங்கானா தாமரை ஊறுகாயும் மம்தாவின் வாஷிங்மிஷின் காமெடியும்
அதன்பேரில், அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். இதை அடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், டிவிட்டர் ஸ்பேஸ் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், இளைய தலைமுறையினருடன் இணைந்து உரையாட இருப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில், நாளை இரவு 8.30 மணிக்கு தனது டிவிட்டர் கணக்கு மூலம் எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.