* அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி என்பது கட்டாய கல்யாணம் என்று பேசிய திருநாவுக்கரசரின் கருத்தை ஏற்க முடியாது. திருமணம் பண்ணி வைக்கும் புரோகிதர் பதவி கூட அவரிடம் இன்று இல்லை. பதவி பறிக்கப்பட்ட அந்த நபர் பேசுவது ஏற்புடைய கருத்தல்ல: தம்பிதுரை. (அண்ணே அது கட்டாய கல்யாணமோ இல்ல காதல் கல்யாணமோ என்ன வேணா இருக்கட்டும். ஆனா மாப்பிள்ளையையும், பொண்ணையும் வெகு நேரமா மண்டபத்துக்கு வெளியில நின்னு திட்டிட்டு இருந்த நீங்க இப்ப பந்தியில வந்து உட்கார்றது அம்பூட்டு நல்லாவாண்ணே இருக்குது. பெரிய மனுஷனுக்கு அழகாண்ணே இது?)

* கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளித்தது போக, எஞ்சியிருக்கும் தொகுதிகளில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும். இப்போது கூட்டணி கட்சிகளுக்கான பங்கீடுதான் போய்க் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின். (தல, உணர்ச்சிவசப்பட்டு நாற்பதையும் கூட்டணிகளுக்கு பகிர்ந்து கொடுத்துடாதீங்க. நாலஞ்சு தொகுதிகளை உங்க கட்சிக்கும் வெச்சுக்குங்க. என்னதான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தாலும் தன் பிள்ளைக்கும் நாலு சொட்டு தண்ணி தரணுமா இல்லையா?)

* மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவதற்காக மாநிலத்தில் ஊழல் செய்த கட்சியோடு மட்டுமில்லாமல் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம்.: பொன்.ராதாகிருஷ்ணன். (வாவ், இதுவல்லவோ கொள்கை. பிரசாரத்துலேயும் மேடைக்கு மேடை இப்படியே பேசுங்க தல. ‘மாபெரும் ஊழல் செய்த  மாண்புமிகு தமிழக அமைச்சர்...’ அப்படின்னு நீங்க சொல்றதை கேக்குறப்ப தமிழ்நாட்டோட காதுல அப்படியே தேன் மாரி பொழியுற மாதிரி இருக்காதோண்ணோ?!)

* டி.டி.வி. தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம்! என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரிடம் தேர்தலில் நிற்பதற்கே ஆள் இல்லை என தகவல் வருகிறது: அமைச்சர் உதயகுமார். (தல! நீங்க பேசுறதைப் பார்த்தா தினகரனை கிண்டலடிக்கிற தொனியிலேயே இல்லையே. ஏதோ அவருக்கு மறைமுக கொ.ப.செ. மாதிரியே இருக்குதே!?)

* புதிய பாடதிட்டம் மற்றும் பாட முறை குறித்து விடுமுறை நாட்களில் மட்டுமே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன். (ஸ்டிரைக் பண்ணி வெளியில நின்னதுக்கு தண்டனையா ஞாயிற்றுக் கிழமை சம்பளத்துல கூட கை வெச்சு கட் பண்ணிட்டீங்க. அதுவும் போதாதுன்னு இப்போ லீவுலேயும் வேட்டு வைக்கிறீங்களே அமீச்சர் சார், இது உங்களுக்கே நன்னாருக்கா?)