தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான படுதோல்வி அடைந்தது.
கோவை உள்ளிட்ட எந்தவொரு மாநகராட்சியையும் அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. அதேபோல 138 நகராட்சிகளில் வெறும் மூன்றையும், 490 பேரூராட்சிகளில் 15ஐ மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. கடந்த ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக இதேபோல படுதோல்வியைச் சந்தித்து இருந்தது.

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வசிக்கும் வார்டுகளில் கூட அதிமுக தோல்வி அடைந்துள்ளதால் தலைவர்களை போல் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், அதிமுகவை காப்பாற்ற சசிகலா வர வேண்டும் என்றும் தொண்டர்கள் இடையே கதறல்கள் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், ‘அதிமுகவுக்கு தொடர் தோல்விகளை தந்து கொண்டிருக்கும் அதிமுகவை பிடித்த தரித்திரமே எடப்பாடி பழனிசாமி விலகு விலகு கட்சியை விட்டு விலகு’ என்றும், அதன் கீழ் டிவிஆர் செல்வகுமார் சைதை பகுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
