முதல்வர் எடப்பாடிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீடு விடுமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசின் நல்ல திட்டங்களை எப்போதுமே வரவேற்கும் அதிமுக, தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து வருகிறது.

நாட்டை ஆளும் மோடி மீது சில நாடுகள் வெறுப்பில் உள்ளனர். அந்த நாடுகள் தமிழ்நாட்டில் போராட்டங்களை தூண்டிவிட்டு திட்டங்களை முடக்கும் வேலையை செய்து வருகின்றனர்.  

இதில், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம், ஸ்டெர்லைட் என எல்லா போராட்டங்களிலும் வெளிநாட்டு சதி உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் இந்தியை மூன்றாவது மொழியாக கற்றுக் கொள்ளலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.