குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இனி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில்தான் பதில் அளிப்போம் என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை சந்தித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தனர்.  
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பீஞ்ச மந்தை பகுதிக்கு சாலை அமைப்பது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தி.மு.க.விடம் கேள்வி எழுப்பி இருந்தார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இதுவரை நாங்கள் தமிழில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்து வந்தோம். அது அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். இனி முதல்வரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்’’எனத் தெரிவித்தார்.