Edappadi palanisamy will continue or eliminate
ஆர்.கே.நகரில் தினகரன் முந்துவது குறித்து ஆளுங்கட்சி தரப்புக்கு முதலிலேயே சங்கு ஊதியவை ‘சர்வே’க்கள்தான். சர்வேக்கள் சொன்னபடியே தினகரன் கெத்தாக ஜெயித்தார்.
இடைத்தேர்தல் தோல்வி, அரசியல் முஸ்டி முறுக்கும் ரஜினிகாந்த், 4 மாசம்! இல்லையில்ல 3 மாசத்துல கலைஞ்சிடும் என ஏலமிடும் ஸ்டாலின் மற்றும் தினகரன்...என ஏகப்பட்ட தடைக்கற்களை தாண்டி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
இந்நிலையில் மீடியா ஒன்று எடப்பாடி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 30 பேரிடம் நான்கு கேள்விகளைக் கொடுத்து நறுக் சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறது.
அதன் கேள்விகள் வருமாறு...
* எடப்பாடி முதல்வர் பதவியில் நீடிப்பாரா அல்லது புதிய முதல்வர் வருவாரா?
* அ.தி.மு.க.வுக்கு டி.டி.வி தினகரன் புதிய தலைவராக வருவதை ஆதரிப்பீர்களா?
* எடப்பாடி - டி.டி.வி. தினகரன் மோதலில் ஆட்சி கலையுமா?
* ரஜினியின் புதிய கட்சியால் அ.தி.மு.க. பலவீனம் அடையுமா?
- என்பவைதான் அந்த கேள்விகள்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதல்வராக நீடிப்பார் என்றே பெரும்பானமையான எம்.எல்.ஏ.க்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். நினைத்தால் பார்க்க முடிகிற எளிமையான எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்று புகழாரம். சிலர் பன்னீரையும் இதில் இணைத்துக் கொண்டு ‘ரெண்டு பேரும் நல்ல ஆட்சி கொடுக்கிறாங்க.’ என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
தினகரன் ஏன் தங்களுக்கு தலைவராக வர வேண்டும்? என பலர் கேட்டிருக்கிறார்கள். அதிலும் ‘அம்மா இருக்கிறப்ப சசி டீம் ஆடாத ஆட்டமா? அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவோமா?’ என்றும் கர்ஜித்திருக்கிறார்கள். ஆனால் வேறு சிலரோ தலைமை அப்படியொரு முடிவை எடுத்தால் தினகரனை ஏற்க ரெடி என சொல்லியிருக்கிறார்கள்.
தினகரனால் ஆட்சியை கலைக்கவெல்லாம் முடியாது என்று பலர் சொல்லியிருக்கின்றனர். ‘அவரு சும்மா பயம் காட்ட முயற்சிக்கிறாருங்க. இந்த ஆட்சியை கலைக்கிறது அம்மாவின் ஆட்சியை கலைக்கும் செயல்? இந்த பாதகத்தை அவர் பண்ணனுமா?’ என்று சென் டிமெண்டலாக கேட்டிருக்கின்றனர் சிலர்.
ரஜினிகாந்தால் அ.தி.மு.க. பலவீனமாகுமா? எனும் கேள்விக்கு ‘அட நீங்க வேற கிண்டல் பண்ணிக்கிட்டு!’ என்று நய்யாண்டியாய் தாக்கி இருக்கின்றனர். ’ரஜினியால எங்களுக்கு எப்படிங்க பிரச்னை வரும்? ரஜினி ஒரு பிளே ஸ்கூல் ஸ்டூடண்டு. நாங்க பி.ஹெச்.டி. முடிச்சவங்க. ரெண்டு பேரையும் கம்பேர் பண்றதே கேவலமான விஷயம்.’ என போட்டுத் தாக்கி இருக்கின்றனர்.
எப்படியோ இந்த சர்வேயின் ரிசல்டால் எடப்பாடியார் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறாராம்!
