நடிகர் ரஜினி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் காரணத்தினால் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நடத்த இருந்த ஆய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் தள்ளி வைக்க நேரிட்டது.

கடந்த வாரம் நிவர் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளை மறுநாளே சென்று பார்வையிட்டு திரும்பினார் எடப்பாடியார். இதே போல் சென்னையிலும் கூட வெள்ள பாதிப்புகளை உடனுக்குடன் அவர் ஆய்வு செய்தார். அதே சமயம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மழை நீர் பாதிப்புகளை பார்வையிடும் பணி கிடப்பில் இருந்தது. நேற்று காலை ஒன்பது மணி துவங்கி வரிசையாக ஐந்து இடங்களில் சென்னை புறநகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது.

காலை ஒன்பது மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கரனை சதுப்பு நில பகுதிகளில் ஆய்வு பிறகு துரைப்பாக்கம் அருகே உள்ள ஒக்கியம் மடு பகுதிக்கு ஒரு விசிட் என எடப்பாடிக்காக பயணத்திட்டம் தயாராக இருந்தது. தொடர்ந்து முட்டுக்காடு முகத்துவாரம், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு இறுதியாக முட்டுக்காட்டில் செய்தியாளர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை அடுத்து அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

அதே  போன்று எடப்பாடியாரின் பிஆர்ஓ டீமும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முதலமைச்சரின் பயணத்திட்டத்தை விவரித்ததுடன் லைவ் கவரேஜ் வேண்டும் என்கிற விண்ணப்பத்தையும் முன்வைத்தனர். இதற்கிடையே தொலைக்காட்சிகளில் காலை எட்டு மணி முதலே ரஜினி மாவட்டச் செயலாளர்களை சந்திக்கும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ரஜினி எடுக்கப்போகும் முடிவு என்ன என்று பலரும் எதிர்பார்த்ததை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறுகிறார்கள்.

இதனால் காலையில் பயணத்திட்டத்தை தள்ளி வைக்குமாறு எடப்பாடி கேட்டுக் கொள்ள அதற்கு ஏற்ப பயணத்திட்டத்தில் மாற்றமும் செய்யப்பட்டது. ரஜினி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடப்போவதில்லை என்று தெரிந்த பிறகே எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டார். மேலும் ஐந்து இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு புரோகிராம் இருந்த நிலையில் அதனை மூன்றாக குறைத்துவிட்டார்கள். இதற்கு காரணம் ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அவர் வீட்டிலேயே இருந்துவிட்டது தான் என்கிறார்கள்.

அதே சமயம் ரஜினி மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்றால் ஊடகங்கள் கண்டுகொள்ளாது என்று பிஆர்ஓ டீமில் இருந்து கொடுத்த அட்வைசை தொடர்ந்தே எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் தனது பயணத்திட்டத்தை ஒத்திவைத்ததாகவும் கூறுகிறார்கள். மேலும் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது ரஜினி ஏதாவது பேட்டி கொடுத்தால் அது ஹைலைட் ஆகிவிடும் என்றும் கருதி தனது பயணத்தில் முதலமைச்சரை மாற்றம் செய்து கொள்ளுமாறு பிஆர்ஓ டீம் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.