ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடியில் அந்த நினைவு மண்டபம் அமைய உள்ளது. அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா நடைபெறும். பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். சுமார் 60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார். 

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் இயற்கை பொய்த்துவிட்டது. பருவமழை போதிய அளவு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. எங்கெல்லாம் குடிநீர் பிரச்சனைகளோ அங்கெல்லாம் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பதுபோல் மாயை ஏற்படுத்த வேண்டாம் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் பேசிய அவர் திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 

முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற முதல்வர் பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஏற்கனவே மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். ஆனால் முதல்வர் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றதாகவே கூறப்படுகிறது.