காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம் என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிசாமி தனது முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். எனவே, அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்திட வேண்டும்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடி மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, கணவரையும் - மகனையும் இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி. இந்த வழக்கினை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குச் சென்ற நீதிபதியை, முதல்வர் பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் மிரட்டியிருப்பது, 'பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்பதை நினைவுபடுத்துகிறது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் 29.6.2020 மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது, ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருப்பார்கள்; எப்படியெல்லாம் விடிய விடிய லத்தியால் அடித்துத் துன்புறுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.

கோவில்பட்டி நீதிமன்ற நடுவரின் அறிக்கையில், காவல் நிலையத்தில் இருந்த குமார் கூடுதல் டிஎஸ்பி எவ்வித முறையான வணக்கமும் செய்யாமல் தனது உடல்பலத்தைக் காட்டுவதற்கான உடல் அசைவுகளுடன் மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடன் நின்றார். காவல் நிலையப் பொது நாட்குறிப்பேடு மற்றும் இதரப் பதிவேடுகளைக் கேட்டபோது அவற்றை சமர்ப்பிக்கவில்லை. அங்குள்ள சிசிடிவி 'ஹார்ட் டிஸ்க்' தினப்படி தானாகவே அழிந்து போகும் வகையில் ஏற்பாடு (Settings) செய்யப்பட்டிருந்தது. சம்பவம் நடைபெற்ற 19.6.2020 தொடர்பான காணொலிப் பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தன. நீதிமன்ற ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் அங்கு நின்ற காவலர்கள் கிண்டல் செய்த காரணத்தால், சம்பவ இடத்து சாட்சியத்தை பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

 விடிய விடிய லத்தியால் அடிக்கப்பட்டு லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளது. லத்திகளைக் கொடுக்கும்படி கூறியும் அங்கிருந்த காவலர்கள் காதில் ஏதும் விழாதது போல் இருந்தார்கள். மகாராஜன் என்னைப் பார்த்து 'உன்னால ஒன்றும் செய்ய முடியாது' என இழிவாகக் கூறினார். லத்தியைக் கேட்டபோது, 'வரேன் இரு' என்று ஒருமையில் பேசினார். போலீஸ் சூழ்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டும், நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டும் இருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தரும் வரிகள், நீதிபதியையே அதிமுக ஆட்சியில் மிரட்டுவார்கள் என்பதற்கான சாட்சியமாக அமைந்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள், 'நீதித்துறை நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது' என்று தாங்களாகவே முன்வந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருத்த அவமானம்.

கூடுதல் டிஎஸ்பி என்பவர் தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட அளவிலான அதிகாரி. அவர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு எப்படிச் சென்றார்?உயர் நீதிமன்றம் அனுப்பிய ஒரு நீதிபதியை ஒரு காவலர் தானாகவே மிரட்டினார் என்பதை எப்படி நம்புவது?மன உளைச்சல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாமா?

இந்த மிரட்டல் - உருட்டல், ஆவணங்கள் தர மறுப்பு, காவல் நிலையத்தில் கொலைக்கான சாட்சியங்கள் அழிப்பு ஆகிய அனைத்தும் கூடுதல் டிஎஸ்பி, டிஎஸ்பி, ஆகியோரளவில் முடிவு எடுத்து அரங்கேற்றப்பட்டவை என்பதை நம்ப முடியாது.உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் ஒரு வழக்கில், துறை அமைச்சரான முதல்வர் பழனிசாமிக்குத் தெரியாமல் இவை அனைத்தும் நடந்து விட்டன என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை!'ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தரையில் அமர்ந்து புரண்டதால் ஊமைக் காயம் ஏற்பட்டது' என்று போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பொய்யானது என்பதற்கு ஆதாரமாக, ஜெயராஜின் பக்கத்துக் கடையில் இருந்த கேமராவில் உள்ள வீடியோ காட்சிகள் நேற்றைய தினம் வெளியானது. இப்போது காவல் நிலையமே ரத்தக்களறியாக இருந்திருக்கிறது என்பது போன்ற நீதித்துறை நடுவரின் அறிக்கை அதை நிரூபித்துள்ளது.

இருவரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று முதல்வர் சொன்னதன் பின்னணி இந்த ரத்தக் களறியை மறைக்கத்தானே!குறிப்பாக, காவல் நிலைய மரணம் அல்ல, இது ஏதோ நீதிமன்றக் காவலில் ஏற்பட்ட விவகாரம் என்று திசை திருப்பத்தானே! உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகு கூடுதல் டிஎஸ்பியும், டிஎஸ்பியும் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, மகாராஜன் என்ற காவலர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட எஸ்.பி.யை கடைசிவரை காப்பாற்ற நினைத்து, இன்று அவரையும் மாற்றியிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை எடுத்த பிறகுதான் இவை அனைத்தும் நடந்துள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்ற உணர்வுடன் அதிமுக அரசே தானாகவும் செயல்படவில்லை; பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் போராடிய பிறகும் செய்யவில்லை.'சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்' என்று உயர் நீதிமன்றமே மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. தமிழகக் காவல்துறை வரலாற்றில் மிகப் பெரியதொரு கரும்புள்ளி! பிறகு காவல்துறையை முதல்வர் இன்னும் வைத்திருப்பது ஏன்?

'நீதித்துறை நடுவர் அறிக்கையும், உடற்கூராய்வு அறிக்கையும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்களாக உள்ளன' என்று உயர் நீதிமன்றமே கண்டுபிடித்துச் சொல்லியுள்ள நிலையில், துறை அமைச்சராக இருந்த முதல்வர் பழனிசாமி எப்படி அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்று மறைத்து, அபாண்டமாக அறிக்கை வெளியிட்டார்?ஆகவே, இரட்டைக் கொலையை மறைக்க சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளுடன் முதல்வரும் இணைந்தே செயல்பட்டார் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன அர்த்தம்?இவ்வளவுக்குப் பிறகும், அங்குள்ள சில காவல்துறை அதிகாரிகளின் அராஜகம், வெறியாட்டம் குறித்து உயர் நீதிமன்றம் இவ்வளவு கண்டிப்புடன் உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும், முதல்வர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பெண் எஸ்.பி. ஒருவரே பாலியல் புகார் அளித்து, வழக்கு நிலுவையில் உள்ளவரும், முதல்வர் உள்ளிட்ட பல அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களைத் திட்டமிட்டு நீர்த்துப் போக வைத்தவருமான முருகன் தென் மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் சிக்கியுள்ள குட்கா வழக்கில் விசாரிக்கப்பட்ட ஜெயக்குமாரை, தூத்துக்குடி எஸ்.பி.யாக நியமித்திருக்கிறார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, உள்நோக்கத்துடன் இதுபோன்ற அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு என்ன அக்கறை பாருங்கள்!

இரட்டைக் கொலை நடந்த பிறகும், நேர்மையான திறமையான காவல்துறை அதிகாரிகளை சட்டம்- ஒழுங்குப் பணிகளில் நியமிக்க வேண்டும், பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் பழனிசாமிக்கு எள்முனையளவு கூட இல்லாதது மிகுந்த வேதனையளிக்கிறது.ஆகவே, காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம் என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிசாமி தனது முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். எனவே, அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

'கமிஷன்', 'கரெப்சன்', 'கலெக்சன்' என்பதால், “பதவியை” விட்டுச் செல்ல மனமில்லை என்றால் குறைந்தபட்சம் போலீஸ் துறையின் பொறுப்பையாவது வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இ.த.ச. 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்வதோடு அவர்களுக்கு உதவியாக இருந்து இந்த இரட்டைக் கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் தவறிழைத்தோர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள், அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்".இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.