தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு தொகுதிகளில் ஒன்று கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதி. இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த கனகராஜ் மறைந்ததாலேயே இடைத்தேர்தல். 

சூலூர் தொகுதியில் சீட் வாங்கிட மிக கடுமையாக முயற்சி செய்தார் மாஜி அமைச்சரும், கோயமுத்தூரின் மாஜி மேயருமான செ.ம.வேலுசாமி. ஆனால் இவருக்கு சீட் கொடுத்தால் நிச்சயம் எம்.எல்.ஏ.வாகிவிடுவார், பிறகு தனக்கிருக்கும் பழைய ஆதரவு கூட்டத்தை மீண்டும் சேர்த்துக் கொண்டு வஸ்தாதாக வலம் வருவார், அது நமது ராஜியத்துக்கு சுத்தப்படாது! என்று சிட்டிங் அமைச்சரும், கோயமுத்தூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வேலுமணி நினைத்தார். அதனால் அவருக்கு சீட் தர வேண்டாம்! என முதல்வரிடம் சொல்லி, முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.

 

இது தெரிந்த செ.ம.வேலுசாமியோ, முதல்வரை நேரில் சந்தித்து “தலைவரே நான் கோயமுத்தூர் கழகத்துல நான் எவ்வளவு பெரிய சீனியர், எனக்கு எவ்வளவு ஆதரவு பட்டாளம் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியும். நான் அடங்கி இருக்குறது உங்க மேலே இருக்கிற பாசம், அன்பு, மரியாதைக்காகத்தான். சீட் தரலேன்னா தினகரனிடம் போறதை தவிர வேற வழியில்லைங்க.” என்று வெளிப்படையாகவே பேசித்தள்ளியிருக்கிறார். அதிர்ந்த முதல்வர், இதை அப்படியே வேலுமணியிடம் சொல்ல, “தலைவரே, அவரை ஒதுக்கி வெச்சுட்டு உங்க விருப்பத்துக்கு ஒரு வேட்பாளரை நியமிங்க. நான் பார்த்துக்குறேன்.” என்றாராம். தனடிப்படையில் கந்தசாமி என்பவரை சூலூர் தொகுதியின் வேட்பாளராக கழக தலைமை அறிவித்துள்ளது. 

யார் இந்த கந்தசாமி?....”62 வயதாகும் கந்தசாமி, சூலூர் தாலுகா வி.வடுகபாளையத்தை சேர்ந்தவர். பி.ஏ. படித்திருக்கும் இவர், வதம்பசேரி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். கோயமுத்தூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்த இவர் இறந்து போன எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா மகனாம். அதாவது தம்பி.” என்று கோயமுத்தூர் மாவட்ட ர.ர.க்கள் சொல்கிறார்கள். தனக்கு தலைமை சீட் தர மறுத்துவிட்டதை அறிந்து செ.ம.வேலுசாமி, வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாராம். ‘சீட் இல்லேன்னா அடுத்த நிமிஷமே தினகரனிடம் போயிடுவேன்.’ என்று சொல்லியவர், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லையாம். சைலண்டாகி, பல்லைக் கடித்தபடி உட்கார்ந்துவிட்டார். 

மாஜி வேலுசாமியின் வேட்டுக்களுக்கு அஞ்சாமல், அமைச்சர் வேலுமணி செமத்தியாக அவருக்கு ரிவிட் வைத்து உட்கார வைத்துவிட்டார்! என்று கொக்கரிக்கிறார்கள் கோயமுத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வினர். “வேலுசாமி தினகரன் பக்கம் மாறமாட்டார்னு அமைச்சருக்கு நல்லாவே தெரியும். எந்த பக்கம் பசை, லாபம், வாய்ப்பு, வசதி இருக்குதோ அந்தப்பக்கத்தை விட்டு எந்த காலத்திலும் வேலுசாமி நகரமாட்டார். அதனாலதான் துணிஞ்சு ரிவிட் வெச்சார் அமைச்சர்.” என்கிறார்கள் அவர்கள். ஆனால் பல்லைக் கடித்து அமைதி காக்கும் வேலுசாமி நிச்சயம் தனது ஏமாற்றத்துக்காக பழி வாங்குவார்! சூலூர் தொகுதி அ.தி.மு.க.வில் உள்குத்து அடிதடிகளுக்கு பஞ்சமே இருக்காது!.........என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.